Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 541

பொருட்பால்அரசியல்55. செங்கோன்மை

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை.

OrntukaN NOTA tiRaipurin tiyArmATTumtErntusey vaஃtE muRai

Tirukumar Thiagarajah

பொருள் / உரை

முருகா எளிய உரை

நடந்த குற்றத்தின் உண்மைத்தன்மையை நன்கு ஆராய்ந்து, எவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் நடுவுநிலைமை நின்று, குற்றத்திற்குப் பொருத்தமான தண்டனையை நீதிநூல் முறைப்படி தீர ஆய்ந்து வழங்குவதே சிறந்த செங்கோல் நீதியாகும்.

• ஓர்ந்து = குற்றத்தின் உண்மைத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து,• யார்மாட்டும் கண்ணோடாது = எவரிடத்திலும் பாரபட்சம் அல்லது முகதாட்சணியம் பார்க்காமல்,• இறை புரிந்து = நடுவுநிலைமையோடு நின்று,• தேர்ந்து = அக்குற்றத்திற்குரிய தண்டனையைச் சீர்தூக்கி ஆராய்ந்து,• செய்வஃதே முறை = வழங்குவதே செங்கோல் ஆட்சியின் சிறந்த நீதியாகும்.

மு.வரதராசன்

யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

பரிமேலழகர்

ஓர்ந்து - தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி: யார்மாட்டும் கண்ணோடாது, இறை புரிந்து - நடுவு நிலைமையைப் பொருந்தி, தேர்ந்து - அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து, செய்வஃதே முறை - அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம். (நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை இறை என்றும் உயிரினும் சிறந்தார் கண்ணும் என்பார் 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை 'இறை' எனவும் , செய்வது 'செய்வஃது' எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.

Meaning in English

Search out, to no one favour show; with heart that justice loves Consult, then act; this is the rule that right approves

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout