உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளியது உள்ளப் பெறின்.
uLLiya teytal eLituman maRRuntAnuLLiya tuLLap peRin
C. Rajasekaran
பொருள் / உரை
முருகா எளிய உரை
தான் அடைய விரும்பும் உயர்ந்த இலட்சியத்தை மறதியில் நழுவ விடாமல் இடைவிடாது மனத்தில் நினைத்து விழிப்புணர்வோடு செயலாற்றினால், நினைத்த வெற்றியை நினைத்தபடியே எளிதில் அடையலாம்.
• தான் உள்ளியது உள்ளப் பெறின் = தான் அடைய நினைத்த இலட்சியத்தை மறக்காமல் இடைவிடாது நினைத்து விழிப்புடன் இருந்தால்,• உள்ளியது எய்தல் = அவன் எண்ணிய குறிக்கோளை எண்ணியவாறே அடைவது,• எளிது மன் = மிகவும் எளிதானதாகும்.
மு.வரதராசன்
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.
பரிமேலழகர்
தான் உள்ளியது எய்தல் எளிது மன் - அரசனுக்குத் தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம், மற்றும் உள்ளியது உள்ளப் பெறின் - பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின். (அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது: மறவி இன்றி அதன்கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.
சாலமன் பாப்பையா
நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.
Meaning in English
'Tis easy what thou hast in mind to gain, If what thou hast in mind thy mind retain





