அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்கருவியால் போற்றிச் செயின்.
ariyaven RAkAta illaipos sAvAkkaruviyAR pORRis seyin
Sai Priya Ramesh
பொருள் / உரை
முருகா எளிய உரை
விழிப்புணர்வு என்னும் இடைவிடாத கவனத்தைக் கருவியாகக் கொண்டு சிந்தித்துச் செயல்பட்டால், 'செய்வதற்கு அரியது' என்று முடியாத காரியம் என்று உலகில் எதுவுமே இல்லை; எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கலாம்.
• பொச்சாவாக் கருவியால் = மறதியற்ற விழிப்புணர்வு என்னும் மனக்கருவியைக் கொண்டு,• போற்றிச் செயின் = கவனத்தோடு சிந்தித்துப் பாதுகாத்துச் செயல்பட்டால்,• அரிய என்று = 'இது மிகவும் கடினமானது' என்று சொல்லப்பட்டு,• ஆகாத இல்லை = செய்து முடிக்க முடியாத காரியம் என்று உலகத்தில் எதுவுமே இல்லை.
மு.வரதராசன்
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
பரிமேலழகர்
அரிய என்று ஆகாத இல்லை - இவை செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை, பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப் பெறின். (பொச்சாவாத என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. அந்தக்கரணமாகலின் 'கருவி' என்றார். இடைவிடாத நினைவும் தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.
Meaning in English
Though things are arduous deemed, there's nought may not be won, When work with mind's unslumbering energy and thought is done





