அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லைபொச்சாப் புடையார்க்கு நன்கு.
assa muTaiyArk karaNillai AngkillaipossAp puTaiyArkku nanku
Aaryan Dinesh Kanagaratnam
பொருள் / உரை
முருகா எளிய உரை
கோழைகளுக்கு எத்தகைய பாதுகாப்பு அரண்களாலும் பயனில்லை; அதுபோலவே, விழிப்புணர்வின்றி மறதியும் கவனக்குறைவும் கொண்டு வாழ்பவர்களுக்கு எத்தனை பெரிய செல்வமும் நல்வாய்ப்புகளும் இருந்தாலும் எந்த நன்மையும் உண்டாகாது.
• அச்சம் உடையார்க்கு = மனத்தில் பயமும் கோழைத்தனமும் உள்ளவர்களுக்கு,• அரண் இல்லை = மலை மற்றும் கோட்டை போன்ற பாதுகாப்பு அரண்களால் எந்தப் பயனும் இல்லை;• ஆங்கு = அதுபோலவே,• பொச்சாப்பு உடையார்க்கு = கவனக்குறைவும் மறதியும் கொண்டு விழிப்புணர்வின்றி இருப்பவர்களுக்கு,• நன்கு இல்லை = எவ்வளவு பெரிய செல்வமும் வாய்ப்புகளும் இருந்தாலும் எந்த நன்மையும் உண்டாகாது.
மு.வரதராசன்
உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.
பரிமேலழகர்
அரண் அச்சம் உடையார்க்கு இல்லை - காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை, ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை. (நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.)
சாலமன் பாப்பையா
மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.
Meaning in English
'To cowards is no fort's defence'; e'en so The self-oblivious men no blessing know





