பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
possAppuk kollum pukazhai aRivinainissa nirappukkon RAngku
Dr. M. Gnanasekaran
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• நிச்ச நிரப்பு = நாள்தோறும் வாட்டும் கொடிய வறுமையானது,• அறிவினைக் கொன்றாங்கு = ஒருவனின் கூர்ந்த அறிவை அழித்துவிடுவது போல,• பொச்சாப்பு = விழிப்புணர்வில்லாத கவனக்குறைவான மறதியானது,• புகழைக் கொல்லும் = ஒருவன் ஈட்டிய நற்புகழை அடியோடு அழித்துவிடும்.எளிய விளக்கம்:தொடர்ந்து வாட்டும் வறுமை ஒருவனுடைய கூர்ந்த அறிவை மழுங்கடித்து அழிப்பது போல, விழிப்புணர்வின்றிச் செய்யும் கவனக்குறைவான மறதி ஒருவன் வாழ்நாள் முழுவதும் ஈட்டிய நற்புகழை அடியோடு அழித்துவிடும்.
மு.வரதராசன்
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.
பரிமேலழகர்
புகழைப் பொச்சாப்புக் கொல்லும் - ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும், அறிவினை நிச்சநிரப்புக் கொன்றாங்கு - அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல. (நிச்ச நிரப்பு: நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து. அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்: அது போல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அவற்குத் தற்காவாமையானும், காரியக் கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.
Meaning in English
Perpetual, poverty is death to wisdom of the wise; When man forgets himself his glory dies





