பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர்.
potunOkkAn vEntan varisaiyA nOkkinatunOkki vAzhvAr palar
S. Sivaranjani
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு தலைவன் தன் சுற்றத்தார் அனைவரையும் மேலோட்டமாக ஒரே மாதிரியாகப் பார்க்காமல், அவரவர் தகுதி, ஆற்றல் மற்றும் தியாகத்திற்கு ஏற்பத் தனித்தனியே முறைப்படி மதித்துப் போற்றினால், அந்த மதிப்பைப் பெற்று அவனோடு பிரியாமல் வாழும் சுற்றத்தார் பலர் ஆவர்.
• வேந்தன் = ஒரு தலைவன்,• பொது நோக்கான் = சுற்றத்தார் அனைவரையும் தகுதி பாராமல் மேலோட்டமாக ஒரே மாதிரி நோக்காமல்,• வரிசையா நோக்கின் = அவரவர் தகுதி, அனுபவம் மற்றும் சேவைக்கேற்ப தனித்தனியே மதித்துப் போற்றினால்,• அது நோக்கி = தலைவன் தரும் அந்த நன்மதிப்பை விரும்பி,• வாழ்வார் பலர் = அவனை விட்டு விலகாமல் சார்ந்து வாழும் சுற்றத்தார் பலர் ஆவர்.
மு.வரதராசன்
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
பரிமேலழகர்
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் - எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின், அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர். (உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப்பொது நோக்கை விலக்கி,எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார்.இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.
Meaning in English
Where king regards not all alike, but each in his degree, 'Neath such discerning rule many dwell happily





