கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தால் சுற்றப் படும்.
koTuttalum insollum ARRin aTukkiyasuRRattAR suRRap paTum
Ameya Karthikeyan
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன் சுற்றத்தாருக்குத் தேவையான உதவிகளைத் தாராளமாகச் செய்து, அவர்களிடம் கனிவான இன்சொற்களைப் பேசி அரவணைக்கும் ஒருவனை, மேலும் மேலும் பெருகி வளரும் சுற்றத்தார் கூட்டம் எப்போதும் அன்போடு சூழ்ந்து நிற்கும்.
• கொடுத்தலும் = சுற்றத்தாருக்கு வேண்டிய உதவிகளைத் தாராளமாகச் செய்தலும்,• இன்சொலும் = எப்போதும் முகம் மலர்ந்து கனிவான இன்சொல் கூறுதலும் ஆகியவற்றை,• ஆற்றின் = ஒருவன் முறையாகச் செய்து வருவானானால்,• அடுக்கிய சுற்றத்தால் = மேலும் மேலும் கிளைத்து வளரும் பலவகைச் சுற்றத்தாரால்,• சுற்றப்படும் = அவன் எப்போதும் அன்போடு சூழப்பட்டு வாழ்வான்.
மு.வரதராசன்
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.
பரிமேலழகர்
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் - ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொல் சொல்லுதலையும் வல்லனாயின், அடுக்கிய சுற்றத்தான் சுற்றப்படும். - தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றத்தானே சூழப்படும். (இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது தோன்ற, 'ஆற்றின்' என்றார். தம்மில் தொடர்தலாவது - சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும் சாமமும் என்ப.)
சாலமன் பாப்பையா
ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.
Meaning in English
Who knows the use of pleasant words, and liberal gifts can give, Connections, heaps of them, surrounding him shall live





