விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவும் தரும்.
viruppaRAs suRRam iyaiyin aruppaRAAkkam palavun tarum
Dr. Gopika Rajeev
பொருள் / உரை
முருகா எளிய உரை
எந்த நிலையிலும் அன்பு நீங்காத நல்ல சுற்றத்தாரின் ஆதரவு ஒருவருக்குக் கிடைத்துவிட்டால், அது அவருக்குத் தளிர்த்து மலரும் நற்பயிரைப் போல முடிவில்லாத வளர்ச்சியையும் பல மடங்கு செல்வ வளங்களையும் வாரி வழங்கும்.
• விருப்பு அறாச் சுற்றம் = எப்போதும் அன்பு குறையாத நல்ல சுற்றத்தாரின் ஆதரவு,• இயையின் = ஒருவனுக்குக் கிடைத்து அமையுமானால்,• அருப்பு அறா = தளிர்த்து மலரும் மொட்டுகள் போல என்றும் குறையாத,• ஆக்கம் பலவும் தரும் = பலவிதமான வளர்ச்சிகளையும் பெரும் செல்வங்களையும் வழங்கும்.
மு.வரதராசன்
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
பரிமேலழகர்
விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின், அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும். (உட்பகையின் நீக்குதற்கு 'விருப்புஅறாச் சுற்றம்' என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு அருப்பு அறா ஆக்கம் என்றும், விசேடித்தார். தொடை நோக்கி விகார மாயிற்று. 'இயையின்' என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர். பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேல் கிளைக்கும் என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா
ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
Meaning in English
The gift of kin's unfailing love bestows Much gain of good, like flower that fadeless blows





