செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல்.
seyvAnai nATi vinainATik kAlattOTeyta uNarntu seyal
Sivaranjini
பொருள் / உரை
முருகா எளிய உரை
செயலைச் செய்யக்கூடிய ஆளின் தகுதி, செய்ய வேண்டிய காரியத்தின் தன்மை, அதற்குரிய தகுந்த காலம் ஆகிய மூன்றையும் சீர்தூக்கிப் பார்த்து, அவை ஒன்றோடொன்று பொருந்துமாறு உணர்ந்து காரியத்தைச் செயல்படுத்த வேண்டும்.
• செய்வானை நாடி = ஒரு காரியத்தைச் செய்பவனின் தகுதியை ஆராய்ந்து,• வினை நாடி = செய்ய வேண்டிய காரியத்தின் தன்மையை ஆராய்ந்து,• காலத்தோடு எய்த உணர்ந்து = அச்செயலைச் செய்வதற்குரிய தகுந்த காலத்தோடு பொருந்துமாறு தெளிவாக உணர்ந்து,• செயல் = ஒரு தலைவன் செயலை நிறைவேற்ற வேண்டும்.
மு.வரதராசன்
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
பரிமேலழகர்
செய்வானை நாடி - முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, வினை நாடி - பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து, காலத்தொடு எய்த உணர்ந்து செயல் - பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க. (செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.)
சாலமன் பாப்பையா
முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.
Meaning in English
Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?' Of hour befitting both assured, let every work proceed





