Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 515

பொருட்பால்அரசியல்52. தெரிந்துவினையாடல்

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

aRintARRis seykiRpAR kallAl vinaitAnsiRantAnen REvaRpAR RanRu

K. K. Nishad

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு காரியத்தை முடிக்கும் வழிமுறைகளை அறிந்து, தடைகளைத் தாங்கி நின்று அதைச் செய்து முடிக்க வல்ல ஆற்றலாளரிடமே அப்பணியை ஒப்படைக்க வேண்டும்; 'இவன் நமக்கு வேண்டப்பட்டவன்' என்பதற்காக மட்டும் ஒரு காரியத்தை பிறரிடம் ஒப்படைக்கக் கூடாது.

• அறிந்து = ஒரு செயலின் நுணுக்கங்களை நன்கு அறிந்து,• ஆற்றி = வரும் தடைகளையும் துன்பங்களையும் தாங்கி நின்று,• செய்கிற்பாற்கு அல்லால் = அதனை வெற்றிகரமாக முடிக்க வல்லவனைத் தவிர,• வினைதான் = ஒரு பொறுப்பானது,• சிறந்தான் என்று = 'இவன் நமக்கு மிக நெருக்கமானவன்' என்பதற்காக,• ஏவற்பாற்று அன்று = மற்றொருவனிடம் ஒப்படைக்கும் இயல்புடையது அல்ல.

மு.வரதராசன்

(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.

பரிமேலழகர்

அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவுசெய்ய வல்லானையல்லது, வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்றன்று - வினைதான் இவன் நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று. ('செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம். அறிவு ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.

Meaning in English

No specious fav'rite should the king's commission bear, But he that knows, and work performs with patient care

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout