Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 513

பொருட்பால்அரசியல்52. தெரிந்துவினையாடல்

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு.

anpaRivu tERRam avAvinmai innAnkumnankuTaiyAn kaTTE teLivu

Siva Archana Chandrasekaran

பொருள் / உரை

முருகா எளிய உரை

அன்பு, அறிவு, கலக்கமில்லாத தெளிந்த மன உறுதி, பேராசையற்ற தூய்மை ஆகிய நான்கு நற்குணங்களையும் நிலையாகப் பெற்றிருக்கும் ஒருவனிடத்திலேயே முக்கியமான பணிகளை நம்பி ஒப்படைக்க வேண்டும்.

• அன்பு = தலைமை மற்றும் மக்கள் மீது உள்ள தூய அன்பும்,• அறிவு = செயல்களைச் செய்வதற்குரிய கூர்ந்த அறிவும்,• தேற்றம் = இடர் வரும் போது கலங்காத தெளிவான மன உறுதியும்,• அவா இன்மை = பொருளின் மீது பேராசை கொள்ளாத மனத்தூய்மையும் ஆகிய,• இந்நான்கும் நன்கு உடையான்கட்டே = இந்த நான்கு நற்பண்புகளையும் உறுதியாகப் பெற்றிருப்பவனிடத்திலேயே,• தெளிவு = பொறுப்புகளை நம்பி ஒப்படைக்கும் தெளிவு இருக்க வேண்டும்.

மு.வரதராசன்

அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

பரிமேலழகர்

அன்பு - அரசன் மாட்டு அன்பும், அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவும், தேற்றம் - அவை செய்தற்கண் கலங்காமையும், அவா இன்மை - அவற்றால் பொருள் கையுற்ற வழி அதன்மேல் அவா இன்மையும் ஆகிய, இந்நான்கும் நன்கு உடையான்கட்டே தெளிவு - இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு. (இந்நான்கும் நன்குடைமை இவன் செய்கின்ற வினைக்கண் யாதும்ஆராய வேண்டுவதில்லை என்று அரசன் தெளிவதற்கு ஏதுஆகலின், அவனை, அதன் பிறப்பிடனாக்கிக் கூறினார். இவைமூன்று பாட்டானும் ஆடற்குரியானது இலக்கணம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.

Meaning in English

A loyal love with wisdom, clearness, mind from avarice free; Who hath these four good gifts should ever trusted be

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout