Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 510

பொருட்பால்அரசியல்51. தெரிந்துதெளிதல்

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும்.

tErAn teLivun teLintAnkaN aiyuRavumtIrA iTumpai tarum

Maya Iyer

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவரைப் பற்றி ஆராயாமல் நம்பிப் பொறுப்பில் அமர்த்துவதும், அவ்வாறு நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்தவரிடம் காரணமின்றிச் சந்தேகம் கொள்வதும் ஆகிய இரண்டுமே ஒருவருக்குத் தீராத பெரும் துன்பத்தை விளைவித்துவிடும்.

• தேரான் தெளிவும் = ஒருவரைப் பற்றி ஆராயாமல் நம்பிப் பொறுப்பில் அமர்த்துவதும்,• தெளிந்தான்கண் ஐயுறவும் = அவ்வாறு நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்தவனிடம் பிறகு தேவையின்றிச் சந்தேகம் கொள்வதும்,• தீரா இடும்பை தரும் = ஒரு தலைவனுக்கு நீங்காத பெரும் துன்பங்களை விளைவிக்கும்.

மு.வரதராசன்

ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.

பரிமேலழகர்

தேரான் தெளிவும் - அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும், தெளிந்தான்கண் ஐயுறவும் - ஆராய்ந்து தெளிந்தவன் மாட்டு ஐயப்படுதலும், இவ்விரண்டும், தீராஇடும்பை தரும் - அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். (வினை வைத்த பின் ஒரு தவறு காணாது வைத்து ஐயுறுமாயின், அதனை அவன் அறிந்து, 'இனி இது நில்லாது' என்னும் கருத்தான் அவ்வினையை நெகிழ்த்துவிடும், அதுவேயன்றிப் பகைவரால் எளிதில் பிரிக்கவும் படும். ஆதலால் தெளிந்தான்கண் ஐயுறவும் ஆகாதாயிற்று. தெளிவிற்கு எல்லை கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும், தெளியப்படாதார்இவர் என்பதூஉம், அவரைத் தெளிந்தால் படும் இழுக்கும், தெளிவிற்கு எல்லையும் கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.

Meaning in English

Trust where you have not tried, doubt of a friend to feel, Once trusted, wounds inflict that nought can heal

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout