Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 504

பொருட்பால்அரசியல்51. தெரிந்துதெளிதல்

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல்.

kuNanATik kuRRamu nATi avaRRuLmikainATi mikka koLal

Mathivanan Pothiyappan

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு மனிதனிடம் உள்ள நற்குணங்களையும் அவனிடம் உள்ள குறைகளையும் ஆராய்ந்து பார்த்து, அவற்றுள் நற்குணங்கள் மிகுதியாக இருப்பின், அந்த நற்குணங்களின் அடிப்படையிலேயே அவரைத் தகுதியானவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

• குணம் நாடி = ஒருவனிடம் இருக்கும் நற்குணங்களை ஆராய்ந்து,• குற்றமும் நாடி = அவனிடம் இருக்கும் குறைகளையும் ஆராய்ந்து,• அவற்றுள் மிகை நாடி = அந்த இரண்டில் எவை அவனிடம் அதிகமாக இருக்கின்றன என்பதை ஆராய்ந்து அறிந்து,• மிக்க கொளல் = குணங்கள் மிகுதியாக இருந்தால் அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மு.வரதராசன்

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

பரிமேலழகர்

குணம் நாடி - குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து, குற்றமும் நாடி - ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகை நாடி - பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து, மிக்க கொளல் - அவனை அம்மிக்கவற்றானே அறிக. (மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவையாவன: தலைமையானாகப் பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமேயுடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

Meaning in English

Weigh well the good of each, his failings closely scan, As these or those prevail, so estimate the man

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout