காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறு.
kAlAzh kaLarin nariyaTung kaNNanjsAvElAL mukatta kaLiRu
Madhumitha Sathyanarayanan
பொருள் / உரை
முருகா எளிய உரை
பகைவர்களின் வேற்படைக்கு அஞ்சாமல் அவர்களைத் தன் தந்தங்களால் குத்திச் சாய்க்கும் வலிமை வாய்ந்த ஆண் யானையாக இருந்தாலும், கால் புதையும் சேற்றில் சிக்கிவிட்டால் ஒரு சிறிய நரியும் கூட அதனைக் கொன்றுவிடும். இடம் அறிந்து செயல்படாத எப்பேர்ப்பட்ட வலியவரும் அழிவர்.
• கண் அஞ்சா = எதற்கும் அஞ்சாத வீரமும்• வேலாள் முகத்த = வேல் ஏந்திய வீரர்களைத் தன் கொம்புகளால் குத்தித் தூக்கும்• களிறு = பெருவலிமை கொண்ட ஆண் யானையாயினும்,• கால் ஆழ் களரின் = கால்கள் புதையும் சேற்று நிலத்தில் சிக்கிக் கொண்டால்,• நரி அடும் = சிறிய நரியும் கூட அதனை எளிதில் கொன்றுவிடும்.
மு.வரதராசன்
வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.
பரிமேலழகர்
கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு - பாகர்க்கு அடங்காவுமாய், வேலாள்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை, கால்ஆழ் களரின் நரி அடும் - அவை கால் ஆழும் இயல்பிற்றாய சேற்றுநிலத்துப் பட்டுழி நரி கொல்லும் ('முகம் ஆகுபெயர்'. 'ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயன் இன்றி மிகவும் எளியரால் அழிவர்' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் அவ்வலங்காரம். 'வேலாழ் முகத்த என்று பாடம் ஓதுவாரும் உளர்: வேற்படை குளித்த முகத்தவாயின் அதுவும் நரி அடுதற்கு ஏதுவாய் முடிதலின்,அது பாடம் அன்மை அறிக. இவை மூன்று பாட்டானும் பகைவரைச் சார்தலாகா இடனும் சார்ந்துழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.
Meaning in English
The jackal slays, in miry paths of foot-betraying fen, The elephant of fearless eye and tusks transfixing armed men





