Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 496

பொருட்பால்அரசியல்50. இடனறிதல்

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்து.

kaTalOTA kAlval neTuntEr kaTalOTumnAvAyum OTA nilattu

Satish Raghunathan

பொருள் / உரை

முருகா எளிய உரை

எவ்வளவு வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரிய தேராக இருந்தாலும் அது கடலில் ஓட முடியாது; கடலில் மிதந்து செல்லும் கப்பல்களும் நிலத்தில் ஓட முடியாது. அவரவர் தமக்குரிய பொருத்தமான களத்திலேயே செயல்பட வேண்டும்.

• கால் வல் நெடுந் தேர் = வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரிய தேர்கள்• கடல் ஓடா = கடலின் மீது ஓட முடியாது;• கடல் ஓடும் நாவாயும் = கடலில் செல்லும் பெரிய கப்பல்களும்• நிலத்து ஓடா = நிலத்தின் மீது ஓட முடியாது.

மு.வரதராசன்

வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

பரிமேலழகர்

கால் வல் நெடுந்தேர் கடல் ஓடா - நிலத்தின்கண் ஓடும் கால்வலிய நெடிய தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா, கடல் ஓடும் நாவாயும் நிலத்து ஓடா - இனி அக்கடலின்கண் ஓடும் நாவாய்கள் தாமும் நிலத்தின் கண் ஓடமாட்டா. ('கடல் ஓடா' என்ற மறுதலை அடையான் 'நிலத்து ஓடும்' என்பது வருவிக்கப்பட்டது. 'கால்வல் நெடுந்தேர்' என்பது ஓடுதற்கு ஏற்ற காலும் பெருமையும் உடையவாயினும் என்பதுபட நின்றது. 'மேற்சென்றார் பகைவர் இடங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினை செய்க' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் மேலை அலங்காரம் ஆயிற்று.)

சாலமன் பாப்பையா

வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.

Meaning in English

The lofty car, with mighty wheel, sails not o'er watery main, The boat that skims the sea, runs not on earth's hard plain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout