Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 495

பொருட்பால்அரசியல்50. இடனறிதல்

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்நீங்கின் அதனைப் பிற.

neTumpunaluL vellum mutalai aTumpunalinnIngkin atanaip piRa

Gayathri Varanasi

பொருள் / உரை

முருகா எளிய உரை

முதலையானது ஆழமான நீரில் இருக்கும் போது மற்ற எல்லா விலங்குகளையும் வென்றுவிடும்; ஆனால், அது தண்ணீரை விட்டு வெளியே வந்துவிட்டால், நிலத்தில் உள்ள எளிய விலங்குகள்கூட அதனை எளிதில் கொன்றுவிடும். எனவே, அவரவர் தமக்குரிய சாதகமான இடத்தில்தான் வலிமை உடையவர்கள் ஆவர்.

• முதலை = வலிமை மிகுந்த முதலையானது• நெடும் புனலுள் = ஆழமான தண்ணீருக்குள் இருக்கும் போது,• வெல்லும் = தன் வலிமையால் மற்ற அனைத்து விலங்குகளையும் எளிதில் வென்றுவிடும்;• புனலின் நீங்கின் = ஆனால் அந்த நீரை விட்டு வெளியே நிலத்திற்கு வந்துவிட்டால்,• அதனை = அந்த முதலையை• பிற அடும் = தரையில் வாழும் மற்ற எளிய விலங்குகளும் எளிதாகத் தாக்கி அழித்துவிடும்.

மு.வரதராசன்

ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.

பரிமேலழகர்

முதலை நெடும்புனலுள்(பிற) வெல்லும் - முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின், பிறவற்றையெல்லாம் தான் வெல்லாநிற்கும், புனலின் நீங்கின் அதனைப் 'பிற' அடும் - அப்புனலின் நீங்குமாயின், அதனைப் பிற எல்லாம் வெல்லா நிற்கும். (எனவே, 'எல்லாரும் தம்நிலத்து வலியர்' என்பது கூறப்பட்டது. 'பிற' என்பது முன்னும் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிற நிற்றலாற்றாமையின் அவையெல்லாம் முதலைக்கு எளியவாம், அவை இயங்குவதற்குரிய நிலத்தின் கண் அஃது இயங்கலாற்றாமையின், 'அஃது அவற்றிற்கெல்லாம் எளிதாம்', என்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடன் அறிந்து செல்வராயின், அவர் தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றா இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம். அவரை அவர் நிற்றலாற்றாவிடத்துச் சென்று வெல்க என்பதாம்.)

சாலமன் பாப்பையா

முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.

Meaning in English

The crocodile prevails in its own flow of water wide, If this it leaves, 'tis slain by anything beside

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout