எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின்.
eNNiyAr eNNam izhappar iTanaRintutunniyAr tunnis seyin
Sivagami
பொருள் / உரை
முருகா எளிய உரை
சாதகமான இடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த இடத்தோடு பொருந்தி நின்று உறுதிப்பாட்டுடன் செயல்பட்டால், நம்மை வென்றுவிடலாம் என்று திட்டம் போட்ட பகைவர்கள் தங்கள் எண்ணங்களை இழந்து தோல்வியடைவார்கள்.
• இடன் அறிந்து = போரிடுவதற்குரிய மிகச் சாதகமான இடத்தைத் தெளிவாக அறிந்து,• துன்னியார் = அந்த இடத்தோடு பொருந்தி நின்று உறுதிபூண்டவர்கள்,• துன்னிச் செயின் = விடாமுயற்சியோடு தகுந்த தாக்குதலை மேற்கொண்டு செயல்பட்டால்,• எண்ணியார் = தங்களை எளிதில் வென்றுவிடலாம் என்று எண்ணியிருந்த பகைவர்கள்,• எண்ணம் இழப்பர் = தங்களின் வெற்றிக் கனவையும் திட்டங்களையும் முற்றிலும் இழந்து தோல்வியடைவர்.
மு.வரதராசன்
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.
பரிமேலழகர்
இடன் அறிந்து துன்னியார் - தாம் வினை செய்தற்கு ஏற்ற இடத்தினை அறிந்து சென்ற அரசர், துன்னிச் செயின் - அரணைப் பொருந்தி நின்று அதனைச் செய்வாராயின், எண்ணியார் எண்ணம் இழப்பர் - அவரை வெல்வதாக எண்ணி இருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை இழப்பர். ('அரண்' என்பது அவாய் நிலையான் வந்தது. 'எண்ண' என்றது எண்ணப்பட்ட தம் வெற்றியை. 'அதனை இழப்பர்' என்றார், அவர் வினை செய்யாமல் தம்மைக் காத்தமையின். இதனான், அவர் பகைவர் தோற்பர் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பகைவர் அரணின் புறத்திருப்பார் அதற்கு ஆம் இடம் அறிதல் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர்.
Meaning in English
The foes who thought to triumph, find their thoughts were vain, If hosts advance, seize vantage ground, and thence the fight maintain





