முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்ஆக்கம் பலவுந் தரும்.
muraNsErnta moympi navarkkum araNsErntAmAkkam palavun tarum
Gayathri Jayaraman
பொருள் / உரை
முருகா எளிய உரை
போர்த் திறனும் பெரும் படைபலமும் கொண்ட மாவீரர்களாக இருந்தாலும் கூட, தகுந்த கோட்டை அரணைத் துணையாகக் கொண்டு செயல்படுவது பலமடங்கு பாதுகாப்பையும் வெற்றிகளையும் தரும்.
• முரண் சேர்ந்த = போர்த் திறனும் பகைமை உணர்வும் பொருந்திய,• மொய்ம்பினவர்க்கும் = மாபெரும் உடல்வலிமையும் படைபலமும் கொண்ட மாவீரர்களுக்கும் கூட,• அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் = தகுந்த கோட்டை அல்லது இயற்கை அரணோடு பொருந்தி நிற்பதால் கிடைக்கின்ற பலமானது,• பலவும் தரும் = பலவகையான மாபெரும் வெற்றிகளையும் பயன்களையும் தரும்.
மு.வரதராசன்
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.
பரிமேலழகர்
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும், அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும். (மாறுபாடாவது: ஞாலம் பொது எனப் பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனானும்,இது பகைமேற் சென்ற அரசர் மேற்றாயிற்று. உம்மை - சிறப்பு உம்மை. அரண் சேராது ஆம் ஆக்கமும் உண்மையின்,ஈண்டு ஆக்கம் விசேடிக்கப்பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.)
சாலமன் பாப்பையா
பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.
Meaning in English
Though skill in war combine with courage tried on battle-field, The added gain of fort doth great advantage yield





