பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
poLLena AngkE puRamvErAr kAlampArttuLvErppar oLLi yavar
Haritha Shri Varshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறிவுக்கூர்மை உடைய சான்றோர்கள், பகைவன் அநீதி செய்த உடனே ஆத்திரமடைந்து கோபத்தை வெளியில் காட்ட மாட்டார்கள்; அவனை வெல்வதற்குரிய சரியான காலம் வரும் வரை சினத்தை மனதுக்குள்ளேயே அடக்கி வைத்து அமைதி காப்பார்கள்.
• ஒள்ளியவர் = கூர்மையான அறிவும் மதிநுட்பமும் உடைய சான்றோர்கள்,• பொள்ளென = பகைவன் அநீதி இழைத்த உடனே திடீரென்று அவசரப்பட்டு,• ஆங்கே = அந்த இடத்திலேயே,• புறம் வேரார் = எதிரி அறியும்படியாகத் தமது கோபத்தை வெளியில் காட்ட மாட்டார்கள்;• காலம் பார்த்து = அவனை அடியோடு வீழ்த்துவதற்குரிய சரியான காலம் வரும் வரை எதிர்பார்த்து,• உள் வேர்ப்பர் = அந்தச் சினத்தை வெளிப்படுத்தாமல் மனத்திற்குள்ளேயே அடக்கி வைத்திருப்பார்கள்.
மு.வரதராசன்
அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.
பரிமேலழகர்
ஒள்ளியவர் - அறிவுடைய அரசர், ஆங்கே பொள்ளெனப் புறம் வேரார் - பகைவர் மிகை செய்த பொழுதே விரைவாக அவரறியப் புறத்து வெகுளார், காலம் பார்த்து உள் வேர்ப்பர் - தாம் அவரை வெல்லுதற்கு ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையும் உள்ளே வெகுள்வர். ('பொள்ளென' என்பது குறிப்பு மொழி. 'வேரார்' 'வேர்ப்பர்' எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார், அறிய வெகுண்டுழித் தம்மைக் காப்பாராகலின், 'புறம் வேரார்' என்றும் வெகுளி ஒழிந்துழிப் பின்னும் மிகை செய்யாமல் அடக்குதல் கூடாமையின் 'உள் வேர்ப்பர்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.
Meaning in English
The glorious once of wrath enkindled make no outward show, At once; they bide their time, while hidden fires within them glow





