Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 483

பொருட்பால்அரசியல்49. காலமறிதல்

அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அறிந்து செயின்.

aruvinai yenpa uLavO karuviyARkAla maRintu seyin

Raj Kumar Anjan

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு காரியத்தைச் செய்து முடிப்பதற்குரிய சரியான கருவிகளையும் சாதனங்களையும் கையில் எடுத்துக்கொண்டு, ஏற்ற காலத்தை அறிந்து செயல்பட்டால், சாதிக்க முடியாத அரிய செயல் என்று இந்த உலகில் எதுவுமே இல்லை.

• கருவியான் = ஒரு காரியத்தை முடிப்பதற்குத் தேவையான சரியான கருவிகளையும் சாதனங்களையும் சேர்த்துக்கொண்டு,• காலம் அறிந்து செயின் = அதற்குப் பொருத்தமான சாதகமான நேரத்தை அறிந்து செயல்பட்டால்,• அருவினை என்ப = 'செய்வதற்கு முடியாத அரிய கடினமான செயல்' என்று சொல்லக் கூடியவை• உளவோ = இவ்வுலகில் ஏதேனும் உண்டோ? (எந்தவொரு அரிய காரியத்தையும் எளிதாகச் சாதித்து விடலாம்).

மு.வரதராசன்

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

பரிமேலழகர்

அருவினை என்ப உளவோ - அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின் - அவற்றை முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின். (கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?

Meaning in English

Can any work be hard in very fact, If men use fitting means in timely act

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout