Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 482

பொருட்பால்அரசியல்49. காலமறிதல்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு.

paruvattO ToTTa ozhukal tiruvinaittIrAmai Arkkung kayiRu

Nandhini Padmanaban

பொருள் / உரை

முருகா எளிய உரை

சாதகமான காலத்தோடு பொருந்திச் செயல்படுவது என்பது, ஒருவரிடமும் நிலையாக நில்லாமல் நழுவி ஓடும் செல்வத்தை, தன்னை விட்டுப் போகாதவாறு இறுக்கிக் கட்டி வைக்கின்ற வலுவான கயிறு போன்றதாகும்.

• பருவத்தோடு = தமக்கு வாய்க்கக்கூடிய சாதகமான கால நேரத்தோடு,• ஒட்ட ஒழுகல் = சரியாகப் பொருந்தித் தவறாமல் விரைந்து செயல்படுவது என்பது,• திருவினை = ஒருபோதும் ஓரிடத்தில் நிலைத்து நிற்காமல் நழுவிச் செல்லக்கூடிய செல்வத்தை,• தீராமை = தன்னை விட்டு விலகிப் போய்விடாதபடி,• ஆர்க்கும் கயிறு = நிலையாகக் கட்டிப் பிணைத்து வைக்கக்கூடிய வலுவான கயிறாகும்.

மு.வரதராசன்

காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

பரிமேலழகர்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம். '(காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.)'

சாலமன் பாப்பையா

காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

Meaning in English

The bond binds fortune fast is ordered effort made, Strictly observant still of favouring season's aid

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout