உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர்.
uTaittam valiyaRiyAr Ukkattin UkkiiTaikkaN murintAr palar
Shruthiksharadha Kishon
பொருள் / உரை
முருகா எளிய உரை
தம்மிடம் உள்ள உண்மையான ஆற்றலின் அளவை உணராமல், வெறும் உணர்ச்சி வேகத்தால் மட்டும் ஒரு காரியத்தில் குதித்து, நடுவழியில் அதனை முடிக்க முடியாமல் முறிந்து அழிந்து போனவர்கள் இவ்வுலகில் பலர் ஆவர்.
• உடைத்தம் வலி அறியார் = தமக்கு இருக்கின்ற உண்மை ஆற்றலின் அளவைச் சரியாக உணராமல்,• ஊக்கத்தின் ஊக்கி = வெறும் உணர்ச்சி வேகத்தாலும் குருட்டுத் தைரியத்தாலும் ஒரு செயலைத் தொடங்கி,• இடைக்கண் = பாதிலேயே அதனை முடிக்க முடியாமல் நடுவழியில் முறிந்து,• முரிந்தார் பலர் = அழிந்து போன மனிதர்கள் இவ்வுலகில் பலர் ஆவர்.
மு.வரதராசன்
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
பரிமேலழகர்
உடைத்தம் வலி அறியார் - கருத்தா ஆதலையுடைய தம் வலியின் அளவறியாதே, ஊக்கத்தின் ஊக்கி - மனஎழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி, இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர். ('உடைய' என்பது அவாய் நின்றமையின் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளும் சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சி நின்றது.)
சாலமன் பாப்பையா
தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.
Meaning in English
Ill-deeming of their proper powers, have many monarchs striven, And midmost of unequal conflict fallen asunder riven





