ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல்.
olva taRiva taRintatan kaNtangkisselvArkkus sellAta til
Jarret Raj Selvarajo
பொருள் / உரை
முருகா எளிய உரை
தம்மால் சாதிக்க முடிந்த செயலையும், அதனை முடிப்பதற்குத் தேவையான வழிகளையும் ஆற்றலையும் நன்கு அறிந்து, அதிலேயே உறுதியாக நிலைத்து நின்று செயல்படுபவர்களுக்கு முடிக்க முடியாத காரியம் என்று எதுவுமே இல்லை.
• ஒல்வது = தம்மால் செய்ய இயலக்கூடிய சாத்தியமான செயலையும்,• அறிவது அறிந்து = அச்செயலை முடிப்பதற்குத் தேவையான ஆற்றல் மற்றும் வழிமுறைகளை நன்கு அறிந்து,• அதன் கண் தங்கி = அதே குறிக்கோளில் தன் மனம், சொல், செயலை முழுமையாக நிலைநிறுத்தி,• செல்வார்க்கு = உறுதியோடு முன்னேறிச் செயல்படுபவர்களுக்கு,• செல்லாதது இல் = கைகூடாமல் தோல்வியடையும் காரியம் என்று எதுவுமே இல்லை (எல்லாவற்றிலும் வெற்றி பெறுவர்).
மு.வரதராசன்
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.
பரிமேலழகர்
ஒல்வது அறிவது அறிந்து - தமக்கியலும் வினையையும் அதற்கு அறிய வேணடுவதாய வலியையும் அறிந்து, அதன்கண் தங்கிச் செல்வார்க்கு - எப்பொழுதும் மன, மொழி, மெய்களை அதன்கண் வைத்துப் பகைமேல் செல்லும் அரசர்க்கு; செல்லாதது இல்- முடியாத பொருள் இல்லை. ('ஒல்வது' எனவே வினை வலி முதலாய மூன்றும் அடங்குதலின் ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே ஆயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியும், அஃது அறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.
Meaning in English
Who know what can be wrought, with knowledge of the means, on this, Their mind firm set, go forth, nought goes with them amiss





