வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல்.
vinaivaliyun tanvaliyum mARRAn valiyumtuNaivaliyun tUkkis seyal
Divya Srivatsan
பொருள் / உரை
முருகா எளிய உரை
செய்யத் தொடங்கும் செயலின் வலிமை, அதைச் செய்து முடிக்கும் தன் சொந்த வலிமை, அதை எதிர்க்கும் பகைவனின் வலிமை, இருவருக்கும் உதவ வரும் நண்பர்களின் வலிமை ஆகிய நான்கு வகை ஆற்றல்களையும் நன்கு ஒப்பிட்டு ஆராய்ந்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்.
• வினை வலியும் = தான் செய்யத் தொடங்கும் காரியத்தின் கடினத்தன்மை மற்றும் சவாலின் அளவையும்,• தன் வலியும் = அதனைச் செய்து முடிப்பதற்குரிய தன்னுடைய படை மற்றும் பொருளின் வலிமையையும்,• மாற்றான் வலியும் = அதனை எதிர்க்கும் எதிராளியின் உண்மை வலிமையையும்,• துணை வலியும் = இருவருக்கும் பக்கபலமாக வந்து உதவக்கூடிய கூட்டாளிகளின் துணை வலிமையையும்,• தூக்கிச் செயல் = ஒன்றுக்கொன்று ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்த்து, தன் பக்கத்து வலிமை மேலோங்கி இருக்கும் போதே அச்செயலைச் செய்ய வேண்டும்.
மு.வரதராசன்
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
பரிமேலழகர்
வினை வலியும் - தான் செய்யக்கருதிய வினைவலியையும், தன் வலியும் - அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும், மாற்றான் வலியும் - அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும், துணைவலியும் - இருவர்க்குந் துணையாவார் வலியையும், தூக்கிச் செயல் - சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க. (இந் நால்வகை வலியுள் வினைவலி அரண் முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி மிகவின்கண் செய்க' என்ற விதியால்,தோற்றல் ஒருதலையாய குறைவின் கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.)
சாலமன் பாப்பையா
செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.
Meaning in English
The force the strife demands, the force he owns, the force of foes, The force of friends; these should he weigh ere to the war he goes





