ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும்.
ARRin varuntA varuttam palarninRupORRinum pottup paTum
Nirjany Srivijay
பொருள் / உரை
முருகா எளிய உரை
சரியான முறையான வழியினைப் பின்பற்றாமல் செய்யப்படும் தவறான முயற்சி, எத்தனை பேர் ஒன்றாகத் திரண்டு வந்து காப்பாற்ற முயன்றாலும் முடிவில் பழுதடைந்து தோல்வியிலேயே முடியும்.
• ஆற்றின் = ஒரு செயலை முறைப்படி முடிப்பதற்குரிய சரியான வழியில்• வருந்தா வருத்தம் = திட்டமிட்டு உழைக்காத தவறான வழிமுறை உழைப்பானது,• பலர் நின்று போற்றினும் = பல மனிதர்கள் ஒன்றாகத் திரண்டு வந்து பக்கபலமாகத் தாங்கிக் காப்பாற்ற முயன்றாலும் கூட,• பொத்துப் படும் = நடுவில் விரிசல் விழுந்து பழுதடைந்து தோல்வியில்தான் முடியும்.
மு.வரதராசன்
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
பரிமேலழகர்
ஆற்றின் வருந்தா வருத்தம் - முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி, பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - துணைவர் பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - துணைவர் பலர் நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும். (முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலைப் பொருள் நசையாளன் கண்ணும், இன்சொல்லைச் செப்பம் உடையான், மடியாளன், முன்னே பிறரொடு பொருது நொந்தவன் என இவர்கண்ணும், வேறுபடுத்தலைத் துணைப்படையாளன் தன் பகுதியோடு பொருந்தாதான் என இவர்கண்ணும், ஒறுத்தலை இவற்றின் வாராத வழி இவர்கண்ணும், தேறப்படாத கீழ்மக்கள் கண்ணும், செய்து வெல்லுமாற்றான் முயறல். புரைபடுதல்: கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல். உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.)
சாலமன் பாப்பையா
ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.
Meaning in English
On no right system if man toil and strive, Though many men assist, no work can thrive





