செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.
seytakka alla seyakkeTunj seytakkaseyyAmai yAnung keTum
Subashini Srisailan
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு மனிதன் செய்யக்கூடாத தகாத காரியங்களைச் செய்வதனாலும் கெட்டு அழிவான்; செய்ய வேண்டிய முக்கியமான நற்செயல்களையும் கடமைகளையும் செய்யாமல் விட்டுவிடுவதனாலும் கெட்டு அழிவான்.
• செய்தக்க அல்ல = ஒரு தலைவன் அல்லது மனிதன் செய்யக்கூடாத தகாத தீய காரியங்களை• செயக் கெடும் = செய்தால் அதனால் நிச்சயம் கெட்டு அழிவான்;• செய்தக்க = அதேபோல், தான் செய்ய வேண்டிய இன்றியமையாத நற்செயல்களையும் கடமைகளையும்• செய்யாமையானும் கெடும் = செய்யாமல் சோம்பேறித்தனமாக விட்டுவிடுவதனாலும் அடியோடு கெட்டு அழிவான்.
மு.வரதராசன்
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
பரிமேலழகர்
செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும். (செய்யத்தக்கன அல்லாவாவன : பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும் ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கனவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை,என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.
Meaning in English
'Tis ruin if man do an unbefitting thing; Fit things to leave undone will equal ruin bring





