அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல்.
azhivatUum AvatUum Aki vazhipayakkumUtiyamunj sUzhntu seyal
Srisubashini
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன், அதனால் ஏற்படும் இழப்புகளையும், உடனடியாகக் கிடைக்கும் நன்மைகளையும், எதிர்காலத்தில் தொடர்ந்து கிடைக்கப்போகும் நீடித்த பயன்களையும் தீர ஆராய்ந்து கணக்குப் பார்த்த பிறகே அச்செயலைச் செய்ய வேண்டும்.
• அழிவதூஉம் = ஒரு செயலைச் செய்யும்போது செலவாகி அழியக்கூடிய பொருட்செலவு மற்றும் இழப்புகளையும்,• ஆவதூஉம் = அந்தச் செயல் முடிந்ததும் உடனடியாகக் கிடைக்கக்கூடிய ஆக்கப் பலன்களையும்,• ஆகி வழிபயக்கும் ஊதியமும் = அச்செயல் நிலைபெற்று நின்ற பின் எதிர்காலத்தில் தொடர்ந்து கிடைக்கக்கூடிய நீடித்த லாபத்தையும்,• சூழ்ந்து செயல் = மிகத் தீர ஆராய்ந்து கணக்குப் பார்த்து, நன்மை மிகுதியாக இருக்கும் எனில் அச்செயலைத் தொடங்குக.
மு.வரதராசன்
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
பரிமேலழகர்
அழிவதூஉம் - வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும், ஆவதூஉம் - அழிந்தால் பின் ஆவதனையும், ஆகி வழி பயக்கும் ஊதியமும் - ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும், சூழ்ந்து செயல் - சீர் தூக்கி உறுவதாயின் செய்க. (உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்து வருதல் . அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம்' என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்.)
சாலமன் பாப்பையா
ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.
Meaning in English
Expenditure, return, and profit of the deed In time to come; weigh these- than to the act proceed





