மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும்.
manantUymai seyvinai tUymai iraNTuminantUymai tUvA varum
Jency
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு மனிதனுடைய மனத்தின் தூய்மையும் அவன் செய்கின்ற செயல்களின் உன்னதமான தூய்மையும் ஆகிய இரண்டும், அவன் பழகுகின்ற நண்பர்களின் தூய்மையான சேர்க்கையை அடிப்படையாகக் கொண்டே உண்டாகும்.
• மனம் தூய்மை = ஒரு மனிதனுடைய உள்ளத்து எண்ணங்களின் தூய்மையும்,• செய்வினை தூய்மை = அவன் செய்கின்ற செயல்களின் மாசற்ற நற்பண்பும்• இரண்டும் = ஆகிய இவ்விரண்டு மேன்மைகளும்,• இனம் தூய்மை = அவன் சேர்ந்திருக்கின்ற நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் தூய்மையை• தூவா வரும் = ஆதாரமான பற்றுக்கோடாகக் கொண்டே அவனிடம் இயல்பாக உண்டாகும்.
மு.வரதராசன்
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.
பரிமேலழகர்
மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - அவ்விசேட உணர்வு புலப்படுவதற்கு இடனாய மனம் தூயனாதல் தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையும் ஆகிய இரண்டும், இனம் தூய்மை தூவா வரும் - ஒருவற்கு இனம் தூயனாதல் தன்மை பற்றுக் கோடாக உளவாம். (மனம் தூயனாதல் ஆவது, விசேட உணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல். செய்வினை தூயனாதல் ஆவது, மொழிமெய்களால் செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல் 'தூவறத் துறந்தாரை (கலித். நெய்த ,1 )என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சி வயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேட உணர்வு புலப்பட்டு, அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என, இதனான்இனத்து உள்ளவாம் ஆறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.
Meaning in English
Both purity of mind, and purity of action clear, Leaning no staff of pure companionship, to man draw near





