மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னான் எனப்படுஞ் சொல்.
manattAnAm mAntark kuNarssi inattAnAminnA nenappaTunj sol
Srinithi
பொருள் / உரை
முருகா எளிய உரை
மனிதர்களுக்கு இயல்பான அறிவு அவரவர் மனத்தால் உண்டாகும்; ஆனால், 'இவன் நல்லவன்' அல்லது 'இவன் கெட்டவன்' என்று உலகம் ஒருவனை எடைபோட்டுப் பேசும் நற்பெயரோ அல்லது அவப்பெயரோ அவன் சார்ந்திருக்கின்ற நண்பர்களின் சேர்க்கையாலேயே உண்டாகும்.
• மாந்தர்க்கு = மனிதர்களுக்கு• உணர்ச்சி = இயற்கையான பொது அறிவும் சிந்தனையும்• மனத்தான் ஆம் = அவரவர் மனத்தின் இயல்பினால் உண்டாகும்;• இன்னான் எனப்படும் சொல் = ஆனால் 'இவன் நல்லவன்' அல்லது 'இவன் தீயவன்' என்று உலகத்தார் எடைபோட்டுப் புகழும் சொல்லோ• இனத்தான் ஆம் = அவன் சேர்ந்திருக்கின்ற நண்பர்களின் கூட்டத்தாலேயே உண்டாகும்.
மு.வரதராசன்
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
பரிமேலழகர்
மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் - மாந்தர்க்குப் பொது உணர்வு தம் மனம் காரணமாக உண்டாம் இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம் - 'இவன் இத்தன்மையன்' என்று உலகத்தாரான் சொல்லப்படும் சொல் இனம் காரணமாக உண்டாம். (இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை மனத்தான் ஆம் என்றும், செயற்கையாய விசேட உணர்வுபற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு இனம் வேண்டுதலின், அதனை 'இனத்தான் ஆம்' என்றும் கூறினார். உவமையளவை கொள்ளாது 'அத் திரிபும்' மனத்தான் ஆம் என்பாரை நோக்கி, இதனான் அது மறுத்துக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.
Meaning in English
Perceptions manifold in men are of the mind alone; The value of the man by his companionship is known





