Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 452

பொருட்பால்அரசியல்46. சிற்றினஞ்சேராமை

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்குஇனத்தியல்ப தாகும் அறிவு.

nilattiyalpAn nIrtirin taRRAkum mAntarkkinattiyalpa tAkum aRivu

Balaji Sridharan

பொருள் / உரை

முருகா எளிய உரை

மழை நீர் தான் பாய்கின்ற நிலத்தின் தன்மைக்கு ஏற்பத் தன் நிறமும் சுவையும் மாறுவது போல, மனிதனின் அறிவும் ஒழுக்கமும் அவன் சேர்ந்திருக்கின்ற நண்பர்களின் சேர்க்கைக்கு ஏற்பவே மாற்றமடையும்.

• நிலத்து இயல்பால் = தான் பாய்கின்ற நிலத்தின் தன்மையினால்• நீர் திரிந்து அற்றாகும் = வானத்துத் தூய நீரானது தன் இயல்பு மாறி அந்நிலத்தின் நிறத்தையும் சுவையையும் பெறுவது போல,• மாந்தர்க்கு = மனிதர்களுக்கும்• அறிவு = அவர்களுடைய சிந்தனையும் புத்தியும்,• இனத்து இயல்பு அதாகும் = அவர்கள் சேர்ந்திருக்கின்ற கூட்டத்தாரின் தன்மைக்கு ஏற்பவே மாற்றமடையும்.

மு.வரதராசன்

சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

பரிமேலழகர்

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் - தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம், மாந்தர்க்கு இனத்து இயல்பு அறிவு (திரிந்து) அதாகும் -அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தின் இயல்பானே அறிவும் தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம். (எடுத்துக்காட்டுவமை: விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனி நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு, பிறஇனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும் என, இதனான் அதனது காரணங் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.

Meaning in English

The waters' virtues change with soil through which they flow; As man's companionship so will his wisdom show

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout