அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது.
anpum aRanum uTaittAyin ilvAzhkkaipaNpum payanum atu
Jyothi Kalaiselvi
பொருள் / உரை
முருகா எளிய உரை
குடும்பத்தார் மேலே தூய அன்புமே!பிறர்க்குதவும் தர்ம அறனுமே!இல்லற வாழ்வதின் பண்பும் அதுவே!இல்லற வாழ்வின் பயனும் அதுவே!
• இல்வாழ்க்கை = ஒருவனது குடும்ப வாழ்க்கையானது• அன்பும் = குடும்பத்தாரிடம் காட்டும் தூய அன்பையும்,• அறனும் = பிறர்க்கு உதவும் தர்ம நெறியையும்• உடைத்தாயின் = பெற்று விளங்குமானால்,• பண்பும் பயனும் அது = அந்த அன்பே இல்வாழ்க்கையின் நற்பண்பாகும்; அந்த அறமே அதன் சிறந்த நற்பயனுமாகும்.
மு.வரதராசன்
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
பரிமேலழகர்
இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.
Meaning in English
If love and virtue in the household reign, This is of life the perfect grace and gain





