தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.
takkA rinattanAyt tAnozhuka vallAnaisseRRAr seyakkiTanta til
Sushmita Narasimhan
பொருள் / உரை
முருகா எளிய உரை
தகுதியுடைய சான்றோர்களைத் தன் துணையாகக் கொண்டு, அவர்கள் வழிகாட்டும் நெறியில் வாழ்கின்ற ஒருவனை, எந்தவொரு பகைவராலும் சூழ்ச்சி செய்து வீழ்த்தவோ தீங்கு செய்யவோ முடியாது.
• தக்கார் இனத்தனாய் = அறிவு, ஒழுக்கம், தகுதி வாய்ந்த பெரியோர்களைத் தன் சுற்றமாகவும் துணையாகவும் கொண்டு,• தான் ஒழுக வல்லானை = அவர்தம் வழிகாட்டுதலின்படி தானும் நல்வழியில் உறுதியாக நடக்க வல்லவனை,• செற்றார் = அவனது கொடிய பகைவர்களாலும் கூட• செயக் கிடந்தது இல் = செய்யக்கூடிய தீங்கு அல்லது துன்பம் என்று எதுவும் இல்லை (அவனை யாராலும் வீழ்த்த முடியாது).
மு.வரதராசன்
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.
பரிமேலழகர்
தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை, செற்றார் செயக் கிடந்தது இல் - பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை. (தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல் வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்த ஆயினும், தானும் அறிந்து, அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக்கிடந்தது இல்' என்றார்.)
சாலமன் பாப்பையா
தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.
Meaning in English
The king, who knows to live with worthy men allied, Has nought to fear from any foeman's pride





