Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 445

பொருட்பால்அரசியல்45. பெரியாரைத் துணைக்கோடல்

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

sUzhvArkaN NAka ozhukalAn mannavansUzhvArais sUzhntu koLal

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

அரசாங்கம் என்பது சரியான ஆலோசனைகளைக் கூறும் அமைச்சர்களையே கண்களாகக் கொண்டு இயங்குவதால், ஒரு தலைவன் சிறந்த மதியூகம் கொண்ட தகுதியான அறிஞர்களை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்துத் தனக்குரிய ஆலோசனைக் குழுவாக வைத்துக் கொள்ள வேண்டும்.

• சூழ்வார் கண்ணாக = தக்க வழிமுறைகளை ஆராய்ந்து சொல்லும் மதியமைச்சர்களைத் தனக்குரிய பார்வையளிக்கும் 'கண்களாகக்' கொண்டு• ஒழுகலான் = நாடாளும் பொறுப்பினை வழிநடத்த வேண்டியிருப்பதால்,• மன்னவன் = ஓர் ஆட்சியாளன்• சூழ்வாரை = அவ்வாறு நன்மைகளை நுட்பமாக ஆராய்ந்து வழிகாட்டக்கூடிய சிறந்த அறிவுடையோரை,• சூழ்ந்து கொளல் = தகுதிகளைத் தீவிரமாக ஆராய்ந்து தேர்ந்தெடுத்துத் தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.

மு.வரதராசன்

தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

பரிமேலழகர்

சூழ்வார் கண் ஆக ஒழுகலான் - தன் பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான், மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க. (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சூழவல்லனாயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றி , அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தல் அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைகோடலின்சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.

Meaning in English

The king, since counsellors are monarch's eyes, Should counsellors select with counsel wise

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout