அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல்.
ariyavaRRu LellAm aritE periyAraippENit tamarAk koLal
Archana Balasubramanian
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறிவுடைய பெரியோர்களைப் போற்றி மதித்து, அவர்களைத் தமக்குரிய உற்ற துணையாகவும் வழிகாட்டியாகவும் ஆக்கிக் கொள்வது, இவ்வுலகில் பெறக்கூடிய அரிய பேறுகள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்த தலையாய பேறாகும்.
• பெரியாரைப் பேணி = ஞானமும் ஒழுக்கமும் நிறைந்த பெரியோர்களைப் போற்றி மதித்து,• தமராக் கொளல் = அவர்களைத் தமக்கு மிகவும் நெருங்கிய சொந்தமாகவும் வழிகாட்டியாகவும் ஆக்கிக் கொள்வது,• அரியவற்றுள் எல்லாம் = மனிதன் இவ்வுலகில் அடையக்கூடிய அரிய நற்பேறுகள் எல்லாவற்றிலும்• அரிதே = மிக மிக அரிய தலையாய பெரும் பேறாகும்.
மு.வரதராசன்
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
பரிமேலழகர்
பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல், அரியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது. (உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.)
சாலமன் பாப்பையா
துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.
Meaning in English
To cherish men of mighty soul, and make them all their own, Of kingly treasures rare, as rarest gift is known





