காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல்.
kAtala kAtal aRiyAmai uykkiRpinEtila EtilAr nUl
Sreekrishnan Swaminathan
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன் விருப்பங்களையும் திட்டங்களையும் பகைவர்கள் அறிந்து கொண்டு அதைப் பயன்படுத்தித் தன்னை வீழ்த்தாதவாறு எச்சரிக்கையோடு மறைத்து நிறைவேற்ற வல்லவனுக்கு, பகைவர்கள் செய்யும் சதித் திட்டங்கள் அனைத்தும் பயனற்று வீணாகிவிடும்.
• காதல = தான் விரும்புகின்ற விருப்பங்களையும் இன்பங்களையும் அல்லது திட்டங்களையும்,• காதல் அறியாமை உய்க்கிற்பின் = பகைவர்கள் தன்னுடைய விருப்பத்தை அறிந்து கொள்ள முடியாதபடி ரகசியமாகவும் விழிப்புடனும் அனுபவித்து நிறைவேற்ற வல்லவனானால்,• ஏதிலார் நூல் = தன்னை வஞ்சித்து அழிக்க நினைக்கும் பகைவர்களின் சதித் திட்டங்களும் சூழ்ச்சி நூல்களும்• ஏதில = எவ்விதப் பயனும் தராமல் பழுதாய் முறிந்து போகும்.
மு.வரதராசன்
தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.
பரிமேலழகர்
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் - தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின், ஏதிலார் நூல் ஏதில் - பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம். (அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.)
சாலமன் பாப்பையா
தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.
Meaning in English
If, to your foes unknown, you cherish what you love, Counsels of men who wish you harm will harmless prove





