செயற்பால செய்யா திவறியான் செல்வம்உயற்பால தன்றிக் கெடும்.
seyaRpAla seyyA tivaRiyAn selvamuyaRpAla tanRik keTum
Dhanyasri Sai
பொருள் / உரை
முருகா எளிய உரை
செல்வத்தைக் கொண்டு செய்ய வேண்டிய தர்மங்களையும் மக்கள் நலப் பணிகளையும் செய்யாமல், கஞ்சத்தனத்தோடு பொருளைப் பூட்டி வைத்திருப்பவனின் செல்வம், அவனுக்கு எந்த நன்மையும் தராமல் முற்றிலும் அழிந்துபோகும்.
• செயற்பால செய்யாது = செல்வத்தைக் கொண்டு செய்ய வேண்டிய அறச்செயல்களையும் மக்கள் நலப் பணிகளையும் செய்யாமல்,• இவறியான் செல்வம் = பணத்தின் மீதுள்ள அளவற்ற கஞ்சத்தனப் பற்றினால் பூட்டி வைக்கும் கருமியின் பெரும் செல்வம்,• உயற்பாலது அன்றி = நிலைத்து நின்று அவனைக் காக்கும் பயன் எதுவும் தராமல்,• கெடும் = வீணாக அடியோடு அழிந்து போகும்.
மு.வரதராசன்
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.
பரிமேலழகர்
செயற்பால செய்யாது இவறியான் செல்வம் - பொருளால் தனக்குச் செய்து கொள்ளப்படும் அவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளம் செய்தானது செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும் - பின் உளதாம்பான்மைத்து அன்றி வறிதே கெடும். (செயற்பால ஆவன: அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செய்தலாவது பெருக்குதல்; அது 'பொன்னின் ஆகும் பொருபடை அப்படை, தன்னின் ஆகும் தரணி, தரணியில், பின்னை ஆகும் பெரும்பொருள், அப்பொருள், துன்னும் காலைத் துன்னாதன இல்லையே' (சீவ. விமலை. 35) என்பதனான் அறிக. அறம் செய்யாமையானும் பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' என்றும், இன்பப்பயன் கொள்ளாமையின் 'கெடும்', என்றும் கூறினார். 'உயற் பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
சாலமன் பாப்பையா
செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.
Meaning in English
Who leaves undone what should be done, with niggard mind, His wealth shall perish, leaving not a wrack behind





