தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார்.
tinaittuNaiyAng kuRRam varinum panaittuNaiyAkkoLvar pazhinANu vAr
Srinivas
பொருள் / உரை
முருகா எளிய உரை
பழிச்சொல்லுக்கு அஞ்சி வாழும் சான்றோர்கள், தம்மிடம் தினை அளவு மிகச் சிறிய தவறு நேர்ந்தாலும் கூட, அதனைப் பனைமரம் போல மிகப்பெரிய குற்றமாகக் கருதி வருந்தி, இனிமேல் அக்குற்றம் நேராதவாறு விழிப்புடன் காத்துக் கொள்வார்கள்.
• பழி நாணுவார் = உலகில் வரும் பழிபாவங்களுக்கு அஞ்சி வெட்கி ஒதுங்கும் மாசற்ற சான்றோர்கள்,• தினைத் துணையாம் = தினை தானியத்தின் அளவு மிகச் சிறியதாக ஒரு• குற்றம் வரினும் = தவறு அல்லது குறைபாடு தம்மிடம் நேர்ந்தாலும் கூட,• பனைத் துணையாக் கொள்வர் = அதனைப் பனைமரத்தின் அளவிற்கு மிகப்பெரிய மாபெரும் குற்றமாகக் கருதி வருந்தி, மீண்டும் அக்குற்றம் வராதவாறு தம்மைக் காத்துக் கொள்வர்.
மு.வரதராசன்
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
பரிமேலழகர்
பழி நாணுவார் - பழியை அஞ்சுவார், தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக் கொள்வர். (குற்றம் சாதிப்பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார், பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அதுவாராமல் காப்பர் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.
Meaning in English
Though small as millet-seed the fault men deem; As palm tree vast to those who fear disgrace 'twill seem





