Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 432

பொருட்பால்அரசியல்44. குற்றங்கடிதல்

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு.

ivaRalum mANpiRanta mAnamum mANAuvakaiyum Etam iRaikku

Rashmi Nair

பொருள் / உரை

முருகா எளிய உரை

நியாயமான தேவைகளுக்குக் கூடப் பொருள் கொடாத கஞ்சத்தனம், பெரியோர்களை வணங்காத போலி கர்வ மானம், தகுதியற்ற கேளிக்கைகளில் மூழ்கித் திளைக்கும் வரம்புமீறிய இன்பம் ஆகிய மூன்றும் ஒரு தலைவனுக்குப் பெரும் வீழ்ச்சியைத் தரும் குற்றங்களாகும்.

• இவறலும் = தகுந்த காரணங்களுக்குக் கூடப் பொருள் கொடுக்க மனமில்லாத கஞ்சத்தனமும்,• மாண்பு இறந்த மானமும் = பெரியோர்களை மதிக்காமல் தகுதியற்ற வீண் பிடிவாதத்தை மானம் என்று காட்டும் போலி கர்வமும்,• மாணா உவகையும் = ஆட்சிப் பொறுப்பை மறந்து பயனற்ற சிற்றின்பக் கேளிக்கைகளில் மூழ்கி மகிழும் தகாத களிப்பும்• இறைக்கு ஏதம் = ஓர் ஆட்சியாளனுக்குப் பேரழிவை உண்டாக்கும் கடுமையான குற்றங்கள் ஆகும்.

மு.வரதராசன்

பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.

பரிமேலழகர்

இவறலும் - வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும் - நன்மையின நீங்கிய மானமும், மாணா உவகையும் - அளவிறந்த உவகையும் , இறைக்கு ஏதம் - அரசனுக்குக் குற்றம். (மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பு இறந்த மானம்' என்றார். அஃதாவது, 'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தந்தை தாய் என்றிவ' ரை(புறப். வெ. மா. பாடாண் -33) வணங்காமையும் முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது, கழிகண்ணோட்டம், பிறரும் , 'சினனே காமம் கழிகண்ணோட்டம்' என்றிவற்றை 'அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது' (பதிற்.22) என்றார். இவை இரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவை என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.

Meaning in English

A niggard hand, o'erweening self-regard, and mirth Unseemly, bring disgrace to men of kingly brith

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout