அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர்.
aRivuTaiyAr ellA muTaiyAr aRivilArennuTaiya rEnu milar
Uthara Unnikrishnan
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறிவுடையவர்கள் வேறு எந்த செல்வமும் இல்லாத ஏழையாய் இருந்தாலும் அவர்கள் எல்லாவற்றையும் உடையவர்களே ஆவர்; ஆனால் அறிவில்லாதவர்கள் வேறு என்னதான் கோடிக்கணக்கில் பெற்றிருந்தாலும் அவர்கள் உண்மையில் எதுவுமே இல்லாதவர்களே ஆவர்.
• அறிவுடையார் = மெய்யறிவு உடைய சான்றோர்கள் (பொருள் செல்வம் எதுவும் இல்லாத ஏழையாய் இருந்தாலும்),• எல்லாம் உடையார் = வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் செல்வங்களையும் குறைவின்றிப் பெற்றவர்களே ஆவர்;• அறிவிலார் = ஆனால் விவேகமும் அறிவும் இல்லாத மூடர்கள்,• என் உடையரேனும் = பொன், பொருள், மாளிகை என வேறு எவற்றையெல்லாம் பெற்றிருந்த போதிலும்,• இலர் = உண்மையில் அவர்கள் எதையும் இல்லாத வறியவர்களே ஆவர்.
மு.வரதராசன்
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
பரிமேலழகர்
அறிவுடையார் எல்லாம் உடையார் - அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும் எல்லாம் உடையராவர், அறிவிலார் என் உடையரேனும் இலர் - அறிவிலாதார் எல்லாம் உடையராயினும் ஒன்றும் இலராவர். (செல்வங்கள் எல்லாம் அறிவாற் படைக்கவும் காக்கவும் படுதலின், அஃது உடையாரை 'எல்லாம் உடையார்' என்றும், அவை எல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமல் காத்தற்கும் தெய்வத்தான் அழிந்துழிப் படைத்தற்கும் கருவியுடையர் அன்மையின், அஃது இல்லாதாரை, 'என்னுடயரேனும் இலர்' என்றும் கூறினார். 'என்னும்' என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், அவரது உடைமையும் ஏனையாரது இன்மையும் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.
Meaning in English
The wise is rich, with ev'ry blessing blest; The fool is poor, of everything possessed





