அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில்.
anjsuva tanjsAmai pEtaimai anjsuvatanjsal aRivAr tozhil
Deepa Karthik
பொருள் / உரை
முருகா எளிய உரை
பழி, பாவம் போன்ற மனிதனை அழிக்கக்கூடிய தீமைகளைக் கண்டு அஞ்சாமல் முட்டாள்தனமாகத் துணிவது மூடத்தனம்; அஞ்ச வேண்டிய தீமைகளுக்கு அஞ்சி அவற்றிலிருந்து விலகித் தன்னைக் காத்துக் கொள்வதே அறிவுடைய சான்றோரின் செயலாகும்.
• அஞ்சுவது அஞ்சாமை = பழி, பாவம், கேடு போன்ற அஞ்ச வேண்டிய தீமைகளைக் கண்டு அஞ்சாமல் துணிவது• பேதைமை = அறியாமையாகிய மூடத்தனமாகும்;• அஞ்சுவது அஞ்சல் = அஞ்சத்தக்க அத்தகைய தீமைகளைக் கண்டு அஞ்சி விலகி நிற்பதே• அறிவார் தொழில் = அறிவுடைய சான்றோரின் கடமையும் செயலாகும்.
மு.வரதராசன்
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
பரிமேலழகர்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம், அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம். (பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதி பற்றி, 'அஞ்சுவது' என்றார். அஞ்சாமை எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல். அது காரியமன்று என்று இகழப்படாது என்பார் 'அறிவார் தொழில்' என்றார். அஞ்சாமை இறை மாட்சியாகச் சொல்லப்பட்டமையின் ,ஈண்டு அஞ்ச வேண்டும் இடம் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதனைஉடையாரது இலக்கணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.
Meaning in English
Folly meets fearful ills with fearless heart; To fear where cause of fear exists is wisdom's part





