எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவ தறிவு.
evva tuRaiva tulaka mulakattOTavva tuRaiva taRivu
Ramya Viswanathan
பொருள் / உரை
முருகா எளிய உரை
உலகத்து உயர்ந்த சான்றோர்கள் எத்தகைய நற்பண்புகளோடு வாழ்கிறார்களோ, அவர்களோடு முரண்படாமல் அந்த உயர்ந்த உலக நெறிமுறைகளோடு பொருந்தி இணைந்து வாழ்வதே உண்மையான அறிவாகும்.
• உலகம் எவ்வது உறைவது = உலகத்து உயர்ந்த சான்றோர்கள் எந்த நல்வழியில் இணைந்து வாழ்கின்றார்களோ,• உலகத்தோடு = அந்தச் சான்றோர்களின் உலக நடைமுறையோடு பொருந்தி• அவ்வது உறைவது = தானும் அந்த நல்வழியில் இணைந்து வாழ்வதே• அறிவு = உண்மையான அறிவுடைமை ஆகும்.
மு.வரதராசன்
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
பரிமேலழகர்
உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு. ('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.
Meaning in English
As dwells the world, so with the world to dwell In harmony- this is to wisely live and well





