உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்கூம்பலும் இல்ல தறிவு.
ulakan tazhIiya toTpam malartalungkUmpalu milla taRivu
Shruthi Krishnan
பொருள் / உரை
முருகா எளிய உரை
உலகத்து உயர்ந்த சான்றோர்களை அரவணைத்து நட்பாக்கிக் கொள்வது பெருமை தரும்; அந்த நட்பிலும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களிலும் தாமரை மலர் போல விரிந்து மகிழ்வதோ அல்லது வாடிக் குவிவதோ இன்றி, எப்போதும் ஒரே சீரான அமைதியான சமநிலையோடு இருப்பதே உண்மையான அறிவாகும்.
• உலகம் தழீஇயது ஒட்பம் = உலகத்து உயர்ந்த சான்றோர்களோடு நட்புக் கொண்டு அவர்களை அரவணைத்து வாழ்வது ஒருவனுக்கு நல்ல மேன்மையாகும்;• மலர்தலும் கூம்பலும் இல்லது = அந்த நட்பிலும் வாழ்விலும், தொடக்கத்தில் மலர்வது போல மிதமிஞ்சி மகிழ்வதும் பின்னர் வாடிச் சுருங்குவதும் இன்றி எப்போதும் ஒரே சீரான சமநிலையைக் கொண்டிருப்பதே• அறிவு = உண்மையான அறிவுடைமை ஆகும்.
மு.வரதராசன்
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.
பரிமேலழகர்
உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம், மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம். ('தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான்,எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்.காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன.இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும்இல்லது என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா
உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.
Meaning in English
Wisdom embraces frank the world, to no caprice exposed; Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed





