எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவு.
eNporuLa vAkas selassollit tAnpiRarvAynuNporuL kANpa taRivu
Madan Gowri
பொருள் / உரை
முருகா எளிய உரை
தான் சொல்லும் கடினமான கருத்துகளையும் கேட்போரின் உள்ளத்தில் எளிதாகப் பதியும்படி விளக்கிச் சொல்வதும், பிறர் பேசும் பேச்சுகளிலுள்ள மிக நுண்ணிய ஆழமான அர்த்தங்களை உடனே எளிதில் உணர்ந்து கொள்வதுமே உண்மையான அறிவாகும்.
• தான் எண்பொருளவாகச் செலச் சொல்லி = தான் பேசும் போது கடினமான அரிய தத்துவக் கருத்துகளையும் கேட்பவர் மனத்தில் பதியும்படி மிக எளிய முறையில் விளக்கிப் பேசி,• பிறர் வாய் நுண்பொருள் காண்பது = பிறர் பேசும் போது அவர்களது பேச்சில் பொதிந்துள்ள மறைமுகமான மிக நுட்பமான உண்மைப் பொருளையும் உடனே கிரகித்து அறிவதே• அறிவு = உண்மையான அறிவுடைமை ஆகும்.
மு.வரதராசன்
தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
பரிமேலழகர்
தான் எண்பொருள் ஆகச் செலச் சொல்லி - தான் சொல்லும் சொற்களை அரிய பொருள் ஆயினும் கேட்பார்க்கு எளிய பொருள் ஆமாறு மனம்கொளச் சொல்லி, பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு - பிறர்வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள்காண அரிதாயினும் அதனைக் காண வல்லது அறிவு. (உடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்லுவன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார் சொல்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனிது விளங்கா ஆயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருள்மேல் வைத்தும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.
Meaning in English
Wisdom hath use of lucid speech, words that acceptance win, And subtle sense of other men's discourse takes in





