Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 423

பொருட்பால்அரசியல்43. அறிவுடைமை

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.

epporuL yAryArvAyk kETpinum apporuLmeypporuL kANpa taRivu

Vennmukiil Mathivanan

பொருள் / உரை

முருகா எளிய உரை

எந்தவொரு விஷயத்தை எவர் வந்து சொன்னாலும், அதை அப்படியே நம்பிவிடாமல் அல்லது புறக்கணிக்காமல், அதன் ஆழமான உண்மைத்தன்மையை நடுநிலையோடு ஆராய்ந்து மெய்ப்பொருளை அறிவதே உண்மையான அறிவாகும்.

• எப் பொருள் = எந்த ஒரு செய்தியையோ அல்லது கருத்தையோ,• யார் யார் வாய்க் கேட்பினும் = எவர் எவர் சொல்லக் கேட்ட போதிலும் (அதை அப்படியே நம்பிவிடாமல்),• அப் பொருள் = அந்தச் செய்தியில் பொதிந்துள்ள• மெய்ப் பொருள் காண்பது = உண்மை எது, பொய் எது என்று ஆழமாக ஆராய்ந்து மெய்ம்மையை அறிவதே• அறிவு = உண்மையான அறிவுடைமை ஆகும்.

மு.வரதராசன்

எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

பரிமேலழகர்

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு. (குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்திநின்றது. மெய்யாதல் , நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.)

சாலமன் பாப்பையா

எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

Meaning in English

Though things diverse from divers sages' lips we learn, 'Tis wisdom's part in each the true thing to discern

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout