Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 419

பொருட்பால்அரசியல்42. கேள்வி

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கியவாயின ராதல் அரிது.

nuNangkiya kELviya rallAr vaNangkiyavAyina rAta laritu

Ajay Murugan

பொருள் / உரை

முருகா எளிய உரை

சான்றோர்களின் நுண்ணிய தத்துவ உபதேசங்களைக் கேட்டறிந்த கேள்வி ஞானம் இல்லாதவர்கள், மற்றவர்களிடம் அடக்கமும் பணிவும் நிறைந்த நன்மொழிகளைப் பேசுபவர்களாக மாறுவது இயலாத காரியமாகும்; அவர்கள் கர்வத்தோடு ஆணவமாகவே பேசுவர்.

• நுணங்கிய கேள்வியர் அல்லார் = சான்றோர்களின் நுண்ணிய மெய்ப்பொருள் உபதேசங்களைக் கேட்டுப் பெற்ற கேள்வி ஞானம் இல்லாதவர்கள்,• வணங்கிய வாயினர் ஆதல் = மற்றவர்களிடம் பணிவான நல்வார்த்தைகளைப் பேசும் அடக்கமான பண்புடையவர்களாக விளங்குவது• அரிது = மிகவும் அரிதான முடியாத காரியமாகும்.

மு.வரதராசன்

நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

பரிமேலழகர்

நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார், வணங்கிய வாயினர் ஆதல் அரிது - பணிந்த மொழியினை உடையராதல் கூடாது. (கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப்புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். 'அல்லால்' என்பதூஉம் பாடம்.)

சாலமன் பாப்பையா

நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

Meaning in English

'Tis hard for mouth to utter gentle, modest word, When ears discourse of lore refined have never heard

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout