கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி.
kETpinung kELAt takaiyavE kELviyAltOTkap paTAta sevi
Kavitha Shankarram
பொருள் / உரை
முருகா எளிய உரை
சான்றோர்களின் நல்லறிவு உரைகளைக் கேட்டுத் துளைக்கப்படாத காதுகள், வெளி உலகத்து வெறும் சத்தங்களைக் கேட்க முடிந்தாலும் கூட, உண்மைப் பொருளை உணர முடியாத காரணத்தால் செவிட்டுக் காதுகளுக்கு ஒப்பானவையே ஆகும்.
• கேள்வியால் = சான்றோர்களின் மெய்ஞ்ஞான உபதேசங்களைக் கேட்டுப் பெறும் கேள்வி அறிவினால்• தோட்கப்படாத செவி = ஆன்ம உணர்வு துளைக்கப்படாத மனிதனின் காதுகள்,• கேட்பினும் = புற உலகத்து வெறும் சத்தங்களையும் ஓசைகளையும் கேட்கின்ற போதிலும் கூட,• கேளாத் தகையவே = உண்மையில் அவை எதையும் உணர்ந்து கொள்ள முடியாத 'செவிட்டுக் காதுகளின்' தன்மையையே உடையனவாகும்.
மு.வரதராசன்
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
பரிமேலழகர்
கேட்பினும் கேளாத் தகையவே - தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம், கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியால் துளைக்கப்படாத செவிகள். (ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
Meaning in English
Where teaching hath not oped the learner's ear, The man may listen, but he scarce can hear





