பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்தீண்டிய கேள்வி யவர்.
pizhaittuNarntum pEtaimai sollA rizhaittuNarntINTiya kELvi yavar
Pavithra Gopi
பொருள் / உரை
முருகா எளிய உரை
நுண்ணிய ஆய்வறிவோடு பல சான்றோர்களின் நற்போதனைகளைக் கேட்டுப் பெற்ற நிறைந்த கேள்வி ஞானம் உடையவர்கள், ஒருவேளை ஒரு விஷயத்தைத் தவறாகப் புரிந்து கொண்டாலும் கூட, தமக்கு இழிவைத் தரும் முட்டாள்தனமான சொற்களை ஒருபோதும் வாயால் பேச மாட்டார்கள்.
• இழைத்து உணர்ந்து = உண்மைகளை நுண்ணியதாகத் தாமும் ஆராய்ந்து அறிந்து,• ஈண்டிய கேள்வியவர் = பல சான்றோர்களின் உபதேசங்களைக் கேட்டுப் பெற்ற விரிவான கேள்வி ஞானம் உடையவர்கள்,• பிழைத்து உணர்ந்தும் = ஒருவேளை ஏதேனும் ஒரு விஷயத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட சூழலிலும் கூட,• பேதைமை சொல்லார் = தங்களுக்கு அறியாமையையும் இழிவையும் உண்டாக்கும் முட்டாள்தனமான அறிவற்ற சொற்களை ஒருபோதும் பேச மாட்டார்கள்.
மு.வரதராசன்
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
பரிமேலழகர்
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் - பிறழ உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களைச் சொல்லார், இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர்- பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார். ('பிழைப்ப' என்பது திரிந்து நின்றது. பேதைமை : ஆகுபெயர். ஈண்டுதல் : பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தார் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.
Meaning in English
Not e'en through inadvertence speak they foolish word, With clear discerning mind who've learning's ample lessons heard





