கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை.
kaRRila nAyinung kETka aஃtoruvaRkoRkattin URRAn tuNai
Ahana Balaji
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவன் சுயமாக நூல்களைப் படிக்காதவனாக இருந்தாலும் கூட, கற்றறிந்த அறிஞர்கள் கூறும் நல்லறிவு உரைகளைக் கேட்டறிய வேண்டும்; அது அவன் வாழ்வில் துன்பத்தால் தளர்ச்சியுறும் காலங்களில் அவனை வழுக்கி விழாமல் தாங்கிப் பிடிக்கும் உறுதியான ஊன்றுகோல் போலத் துணையாக நிற்கும்.
• கற்றிலன் ஆயினும் = ஒருவன் தன் சொந்த முயற்சியால் நூல்களைக் கற்றுத் தேறாதவனாகவே இருந்தாலும் கூட,• கேட்க = கற்றறிந்த சான்றோர்கள் கூறும் நல்லறிவு மொழிகளைப் பணிவோடு காது கொடுத்துக் கேட்க வேண்டும்;• அஃது = அவ்வாறு கேட்டுப் பெறும் கேள்வி ஞானமானது,• ஒருவற்கு = ஒரு மனிதனுக்கு• ஒற்கத்தின் = வறுமையாலும் சோதனைகளாலும் வாழ்வில் மனம் தளர்ச்சி அடையும் துன்பக் காலங்களில்,• ஊற்றாம் துணை = வழுக்கி விழாமல் தாங்கிப் பிடிக்கும் உறுதியான 'ஊன்றுகோல்' போலத் துணையாக நின்று காக்கும்.
மு.வரதராசன்
நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.
பரிமேலழகர்
கற்றிலன் ஆயினும் கேட்க - உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும், அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க, அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை - அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக் கோடாம் துணை ஆகலான் . ('உம்மை' கற்கவேண்டும் என்பது பட நின்றது. தளர்ச்சி - வறுமையானாதல் அறிவின்மையானாதல் இடுக்கண்பட்டுழி மனம் தளர்தல். அதனைக் கேள்வியினானாய அறிவு நீக்கும் ஆகலின், 'ஊற்றாம் துணை' என்றார். 'ஊன்று' என்னும் ஆகுபெயரின் னகரம் திரிந்து நின்றது.)
சாலமன் பாப்பையா
கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.
Meaning in English
Though learning none hath he, yet let him hear alway: In weakness this shall prove a staff and stay





