Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 41

அறத்துப்பால்இல்லறவியல்5. இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை.

ilvAzhvAn enpAn iyalpuTaiya mUvarkkumnallARRin ninRa tuNai

Mohithaa Balamurugan

பொருள் / உரை

முருகா எளிய உரை

இல்லறம் நடத்திடும் ஒருவன் என்றும்!மாணவர்க்கும் தவத்தோர்க்கும் துணை என்றும்!துறவியர்க்கும் நல்வழி துணை நிற்பான்!மூவர்க்கும் துணையாகி நிலைத்து நிற்பான்!

• இல்வாழ்வான் என்பான் = குடும்ப வாழ்க்கையை நடத்தும் இல்லறத்தான் என்பவன்,• இயல்புடைய மூவர்க்கும் = தமக்குரிய அறநெறியில் வாழும் மற்ற மூவகையினருக்கும் (மாணவர், தவத்தினர், துறவியர் ஆகியோர்க்கும்),• நல்லாற்றின் = அவர்கள் செல்லும் நல்வழியில்• நின்ற துணை = உறுதியான துணையாக நின்று தாங்கும் ஆதாரமாவான்.

மு.வரதராசன்

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

பரிமேலழகர்

இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்; இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை- அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை - அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம். (இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத்தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்.)

சாலமன் பாப்பையா

மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

Meaning in English

The men of household virtue, firm in way of good, sustain The other orders three that rule professed maintain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout