தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு.
toTTanait tURu maNaRkENi mAntarkkukkaRRanait tURum aRivu
Harini
பொருள் / உரை
முருகா எளிய உரை
மணல் கிணற்றில் ஆழமாகத் தோண்டத் தோண்ட ஊற்று நீர் சுரப்பது போல, மனிதர்கள் நல்ல நூல்களைத் தொடர்ந்து ஆழமாகக் கற்கக் கற்க அவர்களது உள்ளத்தில் அறிவாற்றல் பெருகிக் கொண்டே இருக்கும்.
• மணற்கேணி = மணற்பாங்கான நிலத்தில் தோண்டப்படும் கிணற்றில்,• தொட்ட அனைத்து ஊறும் = எந்த அளவுக்கு ஆழமாகத் தோண்டுகிறோமோ அந்த அளவுக்குச் சுவையான ஊற்று நீர் சுரக்கும்;• மாந்தர்க்கு = அதுபோல மனிதர்களுக்கு,• அறிவு = அவர்களுடைய சிந்தனைத் தெளிவும் நுட்பமான அறிவாற்றலும்• கற்ற அனைத்து ஊறும் = அவர்கள் நல்ல நூல்களை எந்த அளவிற்கு ஆழமாகப் படிக்கின்றார்களோ அந்த அளவிற்கு ஊற்றுப்போலப் பெருகிக் கொண்டே இருக்கும்.
மு.வரதராசன்
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
பரிமேலழகர்
மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும். (ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள் .373) என்றதனோடு மலையாமை அறிக.)
சாலமன் பாப்பையா
மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.
Meaning in English
In sandy soil, when deep you delve, you reach the springs below; The more you learn, the freer streams of wisdom flow





